Home செய்திகள் உலக செய்திகள் உக்ரைன் ராணுவ ஸ்டார்லிங்க் வேகம் குறைப்பு

உக்ரைன் ராணுவ ஸ்டார்லிங்க் வேகம் குறைப்பு

உக்ரைன், அக். 21-
உக்ரைன்–ரஷ்யா இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வந்த நிலையில், தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி வருகிறார். உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் வழங்குவதையும் அமெரிக்கா நிறுத்திவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் ராணுவம் திணறி வரும் நிலையில், அந்நாட்டுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இணையச் சேவையின் வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிக்கு 160 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் உக்ரைன் ராணுவ சாதனங்களுக்கான இணைய வேகத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வரம்புகளை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஸ்டார்லிங்க் சேவையை மட்டுமே பெரிதும் நம்பியிருந்த உக்ரைன் ராணுவம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையை மீறி, ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், உக்ரைன் ராணுவம் பயன்படுத்துவது அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘ஸ்டார்ஷீல்டு’ சேவை என்றும், அதன் வேகக் குறைப்பை அமெரிக்க ராணுவமும் அதிபர் டிரம்பும் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார். “ஸ்டார்லிங்க் சேவை வேகத்தைக் குறைக்க உத்தரவிட்டது யார் என்பது தனக்குத் தெரியாது; அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று டிரம்ப் கூறினார். தடையற்ற ஸ்டார்லிங்க் சேவையை மீண்டும் வழங்குமாறு அமெரிக்காவிடமும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடமும் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் காலை வாரிவிடும் செயல் இது என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணையச் சேவை வழங்க அனுமதி மறுக்கப்பட்டதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டி வரும் நிலையில், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு இந்தியா வலியுறுத்தியது சரியான முடிவு என இந்தச் சம்பவம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.