Home மாவட்டங்கள் சென்னை ஆந்திரா முதலீடுகளை ஈர்ப்பதாக குற்றச்சாட்டு

ஆந்திரா முதலீடுகளை ஈர்ப்பதாக குற்றச்சாட்டு

சென்னை, நவ. 9-
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை, அவர்கள் சென்னையில் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டல்களிலேயே சந்தித்து ஆந்திராவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படும் நடவடிக்கை, தொழில் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிண்டி, எம்.ஆர்.சி. நகர், பழைய மகாபலிபுரம் சாலை, ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் உள்ள முன்னணி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளுக்காகத் தங்குகின்றனர். இதைக் குறிவைத்து, ஆந்திர மாநிலத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவினர் அதே ஓட்டல்களில் தங்கி, முதலீட்டாளர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைவிடக் குறைந்த விலையில் உடனடி நிலம், தடையற்ற மலிவான மின்சாரம், கூடுதல் வரிச் சலுகைகள், 24 மணி நேர ஒற்றைச் சாளர அனுமதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அவர்கள் உறுதியளிப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு அனுமதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதங்களையும் சுட்டிக்காட்டி, முதலீடுகளை ஆந்திராவுக்குத் திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், இதுபோன்ற ரகசியப் பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஆந்திர எல்லைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ராயல் என்ஃபீல்டு ஆலை சத்தியவேட்டுக்கும், டிவிஎஸ் நிறுவனத்தின் 5.29 லட்சம் சதுர அடி அலுவலகம் பெங்களூருக்கும் மாற்றப்பட்டதாகவும், ₹7,000 கோடி மதிப்பிலான ஹையர் நிறுவன முதலீடும், ஹூண்டாய்–கியா நிறுவனங்களின் ₹1,614 கோடி மதிப்பிலான மூன்று கொரிய உதிரிபாக ஆலைகளும் அனந்தபூருக்குச் சென்றதாகவும் அந்தக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.