
லக்னோ: செப். 25-
உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சியின் வாக்குகளை 27 ஆயிரம் அதிகரிக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதையொட்டி, லக்னோவில் இருந்து ரேபரேலி நோக்கி ‘பி.டி.ஏ. ரதயாத்திரை’ பிரசாரத்தை அவர் நேற்று தொடங்கினார். கட்சித் தொண்டர்களுடன் சிவப்பு நிற பேருந்துகளில் இந்தப் பயணம் தொடங்கியது.
பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய பி.டி.ஏ. கூட்டணியை மையமாகக் கொண்டு, மத்திய உத்தர பிரதேசத்தில் கட்சியின் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
முன்னதாக, லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “பாதிக்கப்பட்ட, துயரத்தில் உள்ள, அவமதிக்கப்பட்ட மக்கள் பி.டி.ஏ.வுடன் இணைய வேண்டும். அவர்களின் வலியே அவர்களை இணைக்கும் பொதுவான காரணியாக உள்ளது. பி.டி.ஏ. மக்கள் பி.டி.ஏ. அரசை அமைத்து சமூக நீதியை நிலைநாட்டுவார்கள்” என்றார்.














