Home மாவட்டங்கள் சென்னை அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி

சென்னை, அக். 14-
தமிழகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ. இன்னசென்ட் திவ்யா அரசாணை வெளியிட்டுள்ளார்.அந்த அரசாணையில், 2022-23-ம் ஆண்டில் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்காக மாவட்டங்கள் ஏ, பி, சி என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ பிரிவு மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சமும், பி பிரிவு மாவட்டங்களுக்கு தலா ரூ.14 லட்சமும்,
சி பிரிவு மாவட்டங்களுக்கு தலா ரூ.12 லட்சமும் ஒதுக்கப்பட்டது.
இதன்படி, மொத்தம் ரூ.4.96 கோடி செலவில் அந்த ஆண்டில் மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, 2023-24 மற்றும் 2024-25 ஆகிய ஆண்டுகளிலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டான 2026-27-ல் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்காக தமிழக அரசு மொத்தம் ரூ.8.45 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதற்குத் தேவையான இந்த நிதியை, பொது நூலக இயக்குநர் மாவட்டக் கருவூலங்கள் மூலம் முன்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிதியைப் பயன்படுத்தி மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகளை நடத்திக்கொள்ளலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாசிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.4.96 கோடி செலவில் கண்காட்சிகள் நடத்தப்பட்ட நிலையில், 2026-27-ம் கல்வியாண்டில் அவற்றுக்காக ரூ.8.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.