Home மாவட்டங்கள் சென்னை கலந்தாய்வின்றி பணி ஆணைகள்: ரத்து செய்ய கோரிக்கை

கலந்தாய்வின்றி பணி ஆணைகள்: ரத்து செய்ய கோரிக்கை

சென்னை, அக். 14-
நடப்பாண்டில் முதுகலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் வழங்கப்பட்ட பணி ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள், நடப்பாண்டில் பட்டமேற்படிப்பு முடித்த மற்றும் முடிக்கவிருக்கும் அரசு மருத்துவர்கள் (சர்வீஸ் பிஜி) கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடப்பாண்டில், அதாவது ஜூலை முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில், பட்டமேற்படிப்பை முடிக்கும் அரசு சேவை மருத்துவர்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் பணி ஆணைகள் வழங்கப்பட்டதற்கு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்காலிக அல்லது நிரந்தர பணி மாறுதல் ஆணைகள் எதுவாக இருந்தாலும், அவை வெளிப்படையான கலந்தாய்வு மூலமே வழங்கப்பட வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது சர்வீஸ் சீனியர்களுக்கு மருத்துவக் கல்வித் துறையில் பணியிடங்கள் வழங்காமல், பணியில் இளையோருக்கு அந்த இடங்களை வழங்குவது எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கும் என்றும் கூட்டத்தில் கூறப்பட்டது.