Home மாவட்டங்கள் சென்னை காவலர், எஸ்ஐ தேர்வு வயது வரம்பை தளர்த்த கோரிக்கை

காவலர், எஸ்ஐ தேர்வு வயது வரம்பை தளர்த்த கோரிக்கை

சென்னை, அக். 14-
தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வுகளின் வயது வரம்பை 5 ஆண்டுகள் தளர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வாளர்கள் சங்கத் தலைவர் ஏ. கலீல் பாஷா, செயலாளர் ஜி.வி. திருக்குமரன் ஆகியோர் உள்துறைச் செயலர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், தயாராகி வருகின்றனர். தற்போது 2-ம் நிலை காவலர் பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகவும், உதவி ஆய்வாளர் தேர்வுக்கான வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 2 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படுகிறது. கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படவில்லை. இதனால், காவல் துறையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் தயாராகி வந்த லட்சக்கணக்கான இளைஞர்கள், வயது வரம்பைக் கடந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.மற்ற மாநிலங்களில் காவல் துறையில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பு கேரளத்தில் 31 ஆகவும், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் 32 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 33 ஆகவும், குஜராத்தில் 35 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சீருடைப் பணியாளர் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படாததால், 2-ம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான வயது வரம்பை அனைத்து பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் தளர்த்த வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.