Home மாவட்டங்கள் சென்னை மானிய கேஸ் சிலிண்டருக்குநாளை முதல் பயோமெட்ரிக்

மானிய கேஸ் சிலிண்டருக்குநாளை முதல் பயோமெட்ரிக்

சென்னை: செப். 30-
மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதற்கான பயோமெட்ரிக் எனப்படும் இ-கே.ஒய்.சி. (e-KYC) சரிபார்ப்பு நாளை முதல் கட்டாயமாகிறது. இதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்கள், வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் இ-கே.ஒய்.சி. செயல்முறையை நிறைவு செய்யலாம். ஆன்லைனில் செய்வதில் சிரமம் அல்லது சந்தேகம் இருந்தால், உடனடியாக கேஸ் ஏஜென்சியை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், அடுத்தடுத்த சிலிண்டர் முன்பதிவில் சிக்கல் ஏற்படலாம்.
சமையல் கேஸ் இணைப்புகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் போலிக் கணக்குகளைத் தடுக்கவும், அரசு வழங்கும் மானியம் உரிய பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யவும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசு இ-கே.ஒய்.சி. சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை 90 சதவீத வாடிக்கையாளர்கள் இ-கே.ஒய்.சி.யை முடித்துள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் இன்னும் முடிக்கவில்லை என்றும், இது முக்கியமான நடைமுறை என்பதால் விடுபட்ட வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
ஆன்லைனில் சரிபார்ப்பை முடிக்க, மொபைலில் Hello BPCL அல்லது IndianOil One செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, வரும் ஓ.டி.பி. மூலம் செயலியில் உள்நுழைய வேண்டும். பின்னர் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘e-KYC Update’ விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து Aadhaar FaceRD செயலியைப் பதிவிறக்கம் செய்ததும், அது கேஸ் செயலியுடன் இணையும். மொபைல் கேமரா மூலம் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு சரிபார்க்கப்படும். ‘e-KYC Completed’ என்ற செய்தி திரையில் தோன்றினால் மட்டுமே செயல்முறை நிறைவடைந்ததாகும்.நேரில் சரிபார்ப்பை முடிக்க விரும்புவோர், ஆதார் அட்டை நகல், நுகர்வோர் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுடன் கேஸ் ஏஜென்சிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்ப்பை முடிக்கலாம்.