Home மாவட்டங்கள் சென்னை வழக்குகள் முடிந்ததும்5 தொகுதிகளில் இடைத்தேர்தல்

வழக்குகள் முடிந்ததும்5 தொகுதிகளில் இடைத்தேர்தல்

சென்னை, செப். 30-
உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் முடிவடைந்ததும், திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்தத் தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது நிரந்தரமான முடிவு அல்ல என்றும், உயர் நீதிமன்றம் தேர்தல் வழக்கை முடித்ததும் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பெருந்துறை தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது. எனினும், மேல்முறையீடு செய்வதற்கு நவம்பர் 24 வரை அவகாசம் இருப்பதால், அதன்படி சட்டப்பூர்வ முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஆணையம் கூறியது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே தேர்தல் நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை என்றும், ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதி இருக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டது. தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும், அதே காலகட்டத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சட்டம் கூறுவதாக ஆணையம் தெரிவித்தது. முதல்வர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தரப்பில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது. அதேவேளை, திருச்சி கிழக்கு தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பில், வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் வாதத்துக்காக விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.