Home செய்திகள் உலக செய்திகள் வெள்ளை மாளிகை ஊடகத் தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

வெள்ளை மாளிகை ஊடகத் தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

வாஷிங்டன்: செப். 25-
சிஎன்என், எம்எஸ்என்பிசி, பொலிடிகோ ஆகிய 3 ஊடக நிறுவனங்களின் செய்தியாளர் அனுமதி அட்டைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செப்டம்பர் 18-ம் தேதி ரத்து செய்தார். இதை எதிர்த்து அந்த 3 நிறுவனங்களும் கடந்த திங்கள்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கூட்டாட்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
தமது நிர்வாகம் குறித்த இந்த 3 ஊடக நிறுவனங்களின் செய்திகள் “பொய்யானவை, எதிர்மறையானவை” என்று ட்ரம்ப் சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே செய்தியாளர்களுக்கான அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் ஆஜரான நீதித்துறை அமைச்சக வழக்கறிஞர்கள், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டதாக வாதிட்டனர்.
இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி டிம் கெல்லி, 3 ஊடக நிறுவனங்களுக்கும் வெள்ளை மாளிகை விதித்திருந்த தடைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக ஊடக நிறுவனங்களுக்கு முறையான அறிவிப்போ, தங்கள் தரப்பை விளக்குவதற்கான வாய்ப்போ வழங்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தேசிய பாதுகாப்பு காரணம் என அரசு முன்வைத்த வாதத்துக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் நீதிபதி டிம் கெல்லி தெரிவித்தார். ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், 2017-ம் ஆண்டு டிம் கெல்லியை நீதிபதியாக நியமித்திருந்தார்.
3 ஊடக நிறுவனங்களின் அனுமதி அட்டைகளையும் உடனடியாக மீண்டும் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு தொடர்ந்து நடைபெறும் காலத்தில், 14 நாட்களுக்கு இந்த இடைக்கால தடை உத்தரவு அமலில் இருக்கும். ராய்ட்டர்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்களும் நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன. நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.