
நகோயா, செப். 25-
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவு அணியின் இறுதிப்போட்டியில் கமல்ஜீத் மற்றும் சுரூச்சி ஜோடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி மொத்தம் 484.6 புள்ளிகள் பெற்று ஆசிய சாதனை படைத்தது. உலக சாதனையின் புள்ளிகளை விட இது வெறும் 3.8 புள்ளிகள் மட்டுமே குறைவாகும்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே கமல்ஜீத்-சுரூச்சி ஜோடி முன்னிலை வகித்து வந்தது. கொரியா அணியிடமிருந்து பலத்த போட்டி எழுந்தபோதிலும், இறுதியில் 6.6 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.
இறுதிப்போட்டியில் இந்தியா 484.6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த வேளையில், கொரியா 478 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஈரான் 415.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றன.
ருத்ராங்ஷ், ஐஸ்வரி, நீரஜ்க்கு வெள்ளி
இதற்கிடையில், ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணி பிரிவில் ருத்ராங்ஷ் பாட்டீல், ஐஸ்வரி தோமர் மற்றும் நீரஜ் ஜோஷி அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.













