
சென்னை, செப். 30- மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் மாறலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. குறிப்பாக, தவெகவுடன் பாமக நெருக்கம் காட்டுவதாகக் கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சியும் இடதுசாரிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக, தற்போது ‘மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகளுடன் களமிறங்கியுள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவும் சில சிறிய கட்சிகளும் மட்டுமே உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதிமுகவுடன் நீண்டகால நட்புறவில் இருந்த ஜி.கே.வாசன், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், கட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தவெக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கருதப்படுகிறது.















