
குவெட்டா, செப். 30-
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில், கராச்சி மாவட்ட மேற்கு கால்பந்து அணி வீரர்களிடம் ஆயுதம் ஏந்திய மர்மக் கும்பல் துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் நடைபெறும் முதல்வரின் தங்கக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக, கராச்சி மாவட்ட மேற்கு கால்பந்து அணி வீரர்கள் பேருந்தில் குவெட்டா நகருக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், அவர்களின் பேருந்தை வழிமறித்து நிறுத்தியது. பின்னர், வீரர்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அந்தக் கும்பல், அவர்களிடம் இருந்த பணம், செல்போன்கள், விலை உயர்ந்த கருவிகள் உள்ளிட்ட பொருட்களைப் பறித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிப்பறியை எதிர்த்து கேள்வி எழுப்பிய சிலரை, அந்தக் கும்பல் துப்பாக்கி முனையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. குவெட்டா நகரைச் சென்றடைந்ததும், கால்பந்து அணி நிர்வாகம் சார்பில் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில், மஸ்துங் மாவட்டத்திலிருந்து குவெட்டா செல்லும் வழியில், தீவிரவாதக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுவோர் பயணிகளை வழிமறித்து வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.















