Home மாவட்டங்கள் சென்னை பெரம்பூர் சாலையில் திடீர் பள்ளம்

பெரம்பூர் சாலையில் திடீர் பள்ளம்

சென்னை: செப். 30-
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தொகுதியான பெரம்பூரில், சாலையின் நடுவே திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். நல்வாய்ப்பாக, பள்ளம் ஏற்பட்டபோது அந்த இடத்தில் எந்த வாகனமும் செல்லாததால் உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்தப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகிலுள்ள சாலையில் இன்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. வசந்த் தியேட்டர் அருகே உள்ள கே.எம். கார்டன் பகுதியில், சாலையின் நடுப்பகுதியில் ஏற்பட்ட இந்தப் பள்ளம், சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் இருந்தது.
சுமார் 5 அடி ஆழம் கொண்ட பள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த மெட்ரோ அதிகாரிகளும் காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பள்ளத்தைச் சுற்றி தடுப்புகளை அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பூர் பேரக்ஸ் சாலை பகுதியில் இதற்கு முன்பும் சில முறை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டிலும் இதே பேரக்ஸ் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதியும் இதே பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மெட்ரோ பணிகளின் காரணமாகத் தொடர்ந்து இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மீண்டும் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படாத வகையில், பணிகளை உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.