
சென்னை, அக். 14- சைபர் மோசடி கும்பல்களிடம் இருந்து தப்பிப்பது குறித்து சென்னையில் முதியோருக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போலி இணையதளங்கள், வங்கித் தகவல் திருட்டு, ஓடிபி மோசடி, சமூக வலைதள மோசடிகள் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சந்தேகத்துக்கிடமான இணைப்புகளைத் தவிர்ப்பதுடன், தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது அவசியம் என போலீஸார் அறிவுறுத்தினர். பல சைபர் குற்றங்களில் முதியோர் குறிவைக்கப்படுகின்றனர். சென்னையைச் சேர்ந்த 69 வயது ஓய்வுபெற்ற வங்கி ஊழியரைத் தொடர்புகொண்ட மர்மநபர், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி நம்ப வைத்துள்ளார். இதை நம்பி பல தவணைகளாக ரூ.3.40 கோடியை அந்த முதியவர் இழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆந்திரத்தைச் சேர்ந்த கொனத்தலா கிருஷ்ணாவை கைது செய்தனர். இதுபோன்ற மோசடிகளில் முதியோர் சிக்கி பணத்தை இழப்பதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி, சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் உஷாராணி தலைமையில் முன்தினம் மாலை நீலாங்கரை பகுதியில் உள்ள அதுல்யா முதியோர் பராமரிப்பு இல்லத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆன்லைன் முதலீடு மற்றும் வர்த்தக மோசடிகள், இணையவழிப் பின்தொடர்தல், ஏமாற்றுதல், இணையவழித் துன்புறுத்தல், ‘டிஜிட்டல் கைது’ மோசடி, உயர் அதிகாரி அல்லது முதலாளி பெயரில் நடைபெறும் மோசடிகள், பரிசு மற்றும் கூரியர் மோசடிகள் உள்ளிட்டவை குறித்து முதியோருக்கு விளக்கப்பட்டது. புதிதாக உருவாகும் இணையவழி மோசடிகள் குறித்தும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சைபர் துன்புறுத்தல், மிரட்டல் அல்லது இணையவழி மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும், www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.














