Home மாவட்டங்கள் சென்னை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ரூ.197 கோடி செலவு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ரூ.197 கோடி செலவு

சென்னை: செப். 25-
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ரூ.197.84 கோடியும், அதிமுக ரூ.112.39 கோடியும், நாம் தமிழர் கட்சி ரூ.1.37 கோடியும் செலவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளின்படி, போட்டியிட்ட கட்சிகள் தங்களின் வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.
திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கு முன்பு கட்சியிடம் ரூ.365 கோடி கையிருப்பில் இருந்தது. தேர்தல் காலத்தில் நன்கொடையாக ரூ.126 கோடி வசூலிக்கப்பட்டது.
தேர்தலில் மொத்தம் ரூ.197.84 கோடி செலவிடப்பட்ட நிலையில், விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. கட்சி வேட்பாளர்கள் பலருக்கு தலா ரூ.25 லட்சம் தேர்தல் நிதியாக வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது. செலவுகளுக்குப் பிறகு திமுகவிடம் ரூ.319.39 கோடி மீதமுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு ரூ.2.66 கோடியும், எம்பி கமல்ஹாசன் பிரசாரத்துக்கு ரூ.3.24 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ‘பென்’ நிறுவனத்துக்கு ரூ.6.61 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம், கேரளா, புதுச்சேரிக்கான மொத்த தேர்தல் செலவு ரூ.112.39 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பின்போது ரூ.313 கோடி கையிருப்பில் இருந்ததாகவும், தேர்தல் காலத்தில் ரூ.87.41 கோடி வரவாக கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்காக ‘பிரமான்யா ஸ்ட்ராடஜி கன்சல்டிங்’ நிறுவனத்துக்கு ரூ.103 கோடி வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக வங்கிக் கணக்கில் ரூ.295 கோடி மீதமுள்ளது.
நாம் தமிழர் கட்சியிடம் தேர்தல் தொடக்கத்தில் ரூ.19 லட்சம் இருந்தது. நன்கொடையாக ரூ.2.20 கோடி வசூலிக்கப்பட்டது. மொத்த செலவான ரூ.1.37 கோடியில் பிரசாரம், விளம்பரங்களுக்கு ரூ.93 லட்சமும், வேட்பாளர்களுக்காக ரூ.44 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் சீமான் உள்ளிட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை நிதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு கட்சியிடம் ரூ.64 லட்சம் மீதமுள்ளது. ஆளும் கட்சியான தவெகவின் தேர்தல் கணக்கு இன்னும் வெளியிடப்படவில்லை.