Home செய்திகள் தேசிய செய்திகள் 48 மணி நேரத்தில் பதவி விலகாவிட்டால் போராட்டம்

48 மணி நேரத்தில் பதவி விலகாவிட்டால் போராட்டம்

புதுடெல்லி: செப். 25-
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலகாவிட்டால், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே எச்சரித்துள்ளார்.
தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும். அவ்வாறு பதவி விலகவில்லை என்றால், டெல்லியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்” என்றார். சிஜேபி இணை நிறுவனர் சவுரவ் தாஸ் கூறுகையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இனி நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) அடிப்படையில் தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, முந்தைய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சவுரவ் தாஸ் தெரிவித்தார். எஸ்.ஐ.ஆர். தொடர்பான கோப்புகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமையிலான குழுவின் பாதுகாப்பில் வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிஜேபி சார்பில் வலியுறுத்தப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும், தேர்தல்கள் நிறுத்தப்பட வேண்டும், முந்தைய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.