
சென்னை: செப்.30-
2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்து 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், தாராபுரம் ஆகிய 7 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 5 தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை அறிவித்தார். மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
திமுக கூட்டணியில் இருந்தும், தற்போது தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதனால் 5 முனைப் போட்டி நிலவுவதாக கூறப்பட்டாலும், தவெக, திமுக, அதிமுக இடையேதான் முக்கிய போட்டி என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இடைத்தேர்தலில் கூட்டணி கணக்குகள் பெருமளவில் மாறியுள்ளன. அப்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தற்போது தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு சென்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனிக் கூட்டணியாக போட்டியிடுகின்றன.
அதிமுக கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் விலகியுள்ளன. பாஜக அதிமுகவுக்கு ஆதரவளிக்கிறது. பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தவெகவை ஆதரிக்கிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுகிறது.















